தமிழரின் ஜல்லிக்கட்டும், மேலைத்தேயங்களின் யுத்தங்களும்..!! – ஈழத்து துரோணர்..!!!

0
109

அன்பு நண்பர்களே.!
இந்த தலைப்பை பார்க்கும் போது, “மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுகின்றேன்” எனத்தோன்றும்.!

ஆனால், இந்த இரண்டிற்கும்முக்கிய தொடர்பொன்று இருக்கின்றது.!

இந்த உலகம் இரண்டு உலகப்போர்களை சந்தித்து விட்டது. ஆனபோதும் மூன்றாவது உலகப்போருக்கான ஆரம்பத்தில் மனிதகுலம் இருப்பதாக, ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.!

இப்போதைய உலக நாடுகளின் முறுகல்நிலையை, உன்னிப்பாக அவதானித்தால் இதை யாரும் மறுக்க முடியாது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், மனித இனம் தோன்றினாலும், இரண்டாம் உலகப்போரின் போது உருவாக்கப்பட்ட ஆயுதங்களே இன்றைய நவீன ஆயுதங்களின் தோற்றத்திற்கான ஆரம்பமாகும்.!

அந்த போரின் போது ஜேர்மனிய நாசிகளால் உருவாக்கப்பட்ட, நவீன போர் விமானங்கள், யுத்த தாங்கிகள், நவீன இயந்திரத்துப்பாக்கிகள், நவீன நீர்மூழ்கி கப்பல்கள், ராடர்கள், சோனார்கள், நவீன ஏவுகணைகளின் (V-1), (V-2) என்பன உருவாக்கப் பட்டிருந்தன..

இரண்டாம் உலகப்போர் ஆரம்பித்த போது, முன்னேற்றம் குறைந்த ஆயுத வளங்களுடன் தான் போர் ஆரம்பித்தது.
ஆனால், அந்த போர் முடியும் போது, ஒட்டு மொத்த மனிதகுலமே தங்கள் வளங்களையும், மனித அறிவையும் கொண்டு அதி நவீன ஆயுதங்களை உருவாக்கி இருந்தது.!

அதுவே இன்றைய நவீன உலகு. இன்றைய உலகு நொடிக்கு, நொடி வேகமாக வளர்ந்து கொண்டிருப்பதை நீங்கள் காணலாம்.

அந்த போரின் முடிவைத் தொடர்ந்து அமெரிக்காவின் தலைமையில், முதலாளித்துவ அரசுகள் ஒரு அணியிலும், இரசியாவின் தலைமையில் சோஷலிச அரசுகள் ஒரு அணியிலும் பிரிந்து நின்றன. இருவரும் ஒருவரை ஒருவர் அழிக்கும் முயற்சியில் எப்போதும் குறியாய் இருந்தன.

அதற்கு இரண்டு உதாரணங்களே போதும் என்று நினைக்கின்றேன். அமெரிக்காவின், வியட்கொங் போராளிகளுக்கு எதிரான யுத்தத்தில், அமெரிக்காவிற்கு எதிராக, வியட்நாமிற்கு, இரசியா (பழைய சோவியத் யூனியன்) இராணுவ உதவிகளை செய்தது.

அதேபோல 1980களில், இரசியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான யுத்தத்தில் அமெரிக்கா, ஆப்கானுக்கு உதவியது.

இன்று ஆப்கானை, அமெரிக்கா தாக்குவதில் உள்ள தந்திரத்தையும் பார்ப்போம்.

இரசியாவும், அமெரிக்காவும் ஆயுத தொழில்நுட்பத்தில் போட்டி போட்டுக் கொண்டிருந்த போதுதான், சோவியத் யூனியன் சிதைக்கப்பட்டது. இரசியாவின் சிதைவுக்கு பின்னர், அமெரிக்கா போட்டி இல்லாது தனிக்காட்டு ராஜாவாக உருவெடுத்து.

1990களில் அமெரிக்கா அதிநவீன ஆயுதங்களை கொண்டிருந்த போதும், அதன் பாவனைத்திரனை கணிப்பிட முடியாமல் இருந்தது. அந்த நேரத்தில் தான் 1991ம் ஆண்டு ஈராக் அதிபர் சாதம் ஹுசைன், குவைத் நாட்டின் மீது படையெடுத்தார்.

இதை தனக்கு சாதகமாக கருதிய அமெரிக்கா, குவைத்துக்கு உதவப்போவதாகக் கூறிக்கொண்டு, அன்று தன்னிடம் இருந்த அனைத்து தொழில்நுட்பங்கள், மற்றும் ஆயுதங்களை ஈராக்கிற்கு எதிரான யுத்தத்தில் பரிசோதித்திருன்தது.!

அதில், பல ஆயுதங்கள் சோதனையில் வெற்றி அளித்திருந்த போதும், அவர்கள் நம்பிய பல ஆயுதங்கள் கையை விரித்திருந்தது.!

இன்று கணணிமயப்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களுடன் கூடிய ஆயுதங்களின் கையிருப்பே, எல்லா நாடுகளும் கொண்டுள்ளன. இன்று அமெரிக்க அரசின், பென்டகனின் இராணுவ வல்லுனர்கள் ஒரு உண்மையை நம்புகின்றனர்.

அதாவது,இராணுவ சோதனையில் வெற்றி அளித்த ஆயுதங்கள், சண்டைகளில் சோதிக்கப் படவேண்டும் என்பதே அது.!

அடுத்ததாக மிக முக்கியமானது, அந்த ஆயுதங்களை கொண்டு போறிடும் இராணுவ வீரர்களின் போர் புரியும் “உளவுரண் மேம்பட்டிருத்தல்” மிக மிக அவசியமாகும்.!

இதை உணர்ந்த பின்னர் தான், ஆயுத சோதனைக்காகவும், இராணுவவீரர்களின் தமது உளவுரணை மேம்படுத்துவதற்காக்கவுமே, அரபுநாடுகளின் மேல் இல்லாத பொய்களைக்கூறி யுத்தங்களை நடத்தி இருந்தது/ நடத்திக்கொண்டிருக்கின்றது.

வெளியில் பல காரணங்களைக் கூறினாலும், பிரதானமான காரணம் இது தான். அதற்கு சிறந்த உதாரணம் ஈராக் தான்.

இராக்கிடம் இரசாயன ஆயுதங்கள் இருப்பதாக கூறியே அமெரிக்கா சண்டையை ஆரம்பித்தது. சண்டையின் முடிவில், அந்த நாடையே சுடுகாடாக மாற்றி பல இலட்சம் மக்களை கொன்றபின் “தாங்கள் தேடிவந்த ஆயுதம் இல்லை எனக்கூறப்பட்டது”.

இது CIA வின் புலனாய்வு சறுக்கள் என்று ஒரு கதையும் பரப்பப்பட்டது.
ஆனால், அது உண்மையல்ல.! அங்கு அப்படியொரு ஆயுதம் இல்லை என CIA வுக்கு நன்கு தெரியும்.!

உண்மையில் வெளித்தெரியாது, அமெரிக்கா தனது எல்லாப் படைப்பிரிவுகளுக்கும், வலியவே பிற நாடுகள் மீது யுத்தங்களை உருவாக்கி, தமது இராணுவ வீரர்களுக்கு “யுத்த உளவுரணை” இன்று வரை மேன்படுத்திக் கொண்டிருக்கின்றது.

ஒரு போரிடும் இராணுவத்தின் வெற்றியின் பிரதான பங்கு போரிடும் இராணுவத்தின் உளவுரணின் மேன்பாட்டிலேயே தங்கியுள்ளது.!

இதையே தான் ஆரம்பத்தில் ரசியாவும் செய்தது. இப்போது மீண்டும் ரசியாவும் ஆரம்பித்துவிட்டது. உக்ரேனுடனான யுத்தத்தில் சிறு மென்மையை கடைப்பிடித்த போதும், இன்று ISISI எதிராகவும், சிரியாவின் அதிபர் அசாத்திற்கு எதிராக போராடும் கிளர்ச்சியாளர்களை, அழிக்கப் போவதாகக் கூறிக்கொண்டு வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு சண்டையில் குதித்துள்ளது.

விமானம், நீர்மூழ்கியில் இருந்து குருஸ் ஏவுகணைத் தாக்குதல், நேரடி தரைத்தாக்குதல் என, தனது உச்ச இராணுவ திறனை இன்று இரசியா சோதிக்கின்றது.

இரசியாவின் நோக்கமும், அமெரிக்காவின் நோக்கமும் ஒன்று தான்.! ஆனால், அவர்கள் காட்டும் முகம் தான் வேறு, வேறாகவுள்ளது.

ஆக, இராணுவ வீரர்கள் எப்போதும் துணிவுடன் (உளவுரண்) இருக்க சண்டைகள் (வீர விளையாட்டு) தேவை.!

சரி, இதில் எங்கிருந்து ஜல்லிக்கட்டில் காளையை அடக்குவது வந்தது?

அதற்கு நாம் சில ஆயிரம் வருடங்கள் பின்நோக்கி போகவேண்டும். அன்றைய காலங்களில் எம் முன்னோர்கள் பல ஆயிரம் படைகளை கட்டியமைத்து சண்டைகளை வழிநடத்தி நாடுகளை பிடித்தனர்.

ஆனால், அதன் பின் வருடக்கணக்கில் அந்த வீரர்கள் போர், ஓய்வில் இருக்கும் போது, அவர்களின் “போர் ஓர்மம்” படிப்படியாக குறையும்.

இதனை நான் புலிகளமைப்பில், சண்டைகளில் இருந்து, நீண்ட காலம் ஒதுங்கி இருந்த போராளிகள், மீண்டும் சண்டைக்கு போகும் போது, தடுமாற்றம் ஏற்படுவதை அவதானித்துள்ளேன். இது தான் மனித இயல்பு.!

அதற்கு மாற்று ஈடாகத் தான் எமது முன்னோர்கள், தமது படைவீரர்களின் உளவுரணை தொடர்ந்து உச்சத்தில் பேணுவதற்காக, இப்படியான வீர விளையாட்டுகளை அறிமுகப் படுத்தி,காலம் காலமாக எமது சந்ததிக்கு, சந்ததி கடத்திக் கொண்டிருந்தனர்.

இதுவே தமிழரின் வீரத்தின் எஞ்சிய பக்கமாக இன்று இருக்கின்றது.!
இன்று வியாபார நோக்கங்களை முன்னிறுத்தி, இப்படிப் பல தமிழரின் வரலாறுகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு, இன்று நாம் அதை கல்வெட்டுகளில் தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.!

இன்று வல்லரசுகள் மேற்கொள்ளும் உளவுரண் மேம்படுத்தலை, எமது முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே கண்டறிந்து, அதற்கான தீர்வையும் காட்டி உள்ளனர் என்பதும் அதிசயமே.!

மனித உயிர்களை கொன்று உளவுரண் மேம்படுத்துவதை காட்டிலும், காளையை அடக்கி உளவுரணை அதிகரிப்பதை விட மிகச்சிறந்த மனிதாபிமானம் வேறில்லை.!

இன்று ஜல்லிக்கட்டை இந்திய அரசு மிருக வதைச் சட்டத்தின் கீழ் தடை செய்துள்ளது. இன்று வியாபார நோக்கில் உள்ள உலகில், நாட்டுமாடுகளை அழிக்கும் கபடநோக்கத்துக்கு எதிராக தமிழர் அணிதிரள வேண்டும்.

இன்று மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் நாடு இந்தியா. இதிலிருந்தே இந்திய அரசின் கபடநோக்கம் புரியும்

தமிழ் தோன்றி, பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து, தோன்றிய இனமெல்லாம் பல நாடுகளை கொண்டிருந்த போதும், நமக்கென்று ஏன் ஒரு நாடு உருவாக்க முடியவில்லை?

ஆக, மிருக வதை காரணமல்ல.! என்ன காரணம் என்பதை உங்களது அறிவுக்கே விட்டு விடுகின்றேன்.!

இது இரண்டு வருடத்திற்கு முன் பதிவிட்ட , எனது முன்னைய பதிவு. தேவை கருதி மீண்டும் உங்களிடம் கொண்டுவருகின்றேன்.!
அன்புடன் துரோணர்…!!!

SHARE
தமிழ்த் தேசியத்தின் உரிமையின் குரலாய்.. உண்மையின் வெளிச்சமாய்.. இருக்க… உறுதி பூண்டுள்ள ஓர் இணையம்