கஜேந்திரகுமாரை நோக்கி மீள வந்திருக்கும் ஒரு வரலாற்று திருப்பம் – பரணி கிருஸ்ணரஜனி

கீழே உள்ள பதிவு உள்ளுராட்சி தேர்தலின் பின்னுள்ள புவிசார் அரசியலையும் கஜேந்திரகுமாரை நோக்கி தமிழ்த்தேசிய அரசியலின் தலைமைத்துவ பாத்திரம் திரும்புவது குறித்தும் இரண்டு மாதங்களுக்கு முன்பு எழுதியது.

தேர்தல் வெற்றி – தோல்வியை மையப்படுத்திய எதிர்வுகூறல் அல்ல அது. அது ஒரு வரலாற்றுப் போக்கு. ஆனால் தேர்தல் முடிவுகள் அதற்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன.

ததேமமு இன் கணிசமான வெற்றியை வைத்தல்ல இந்த கணிப்பு.

தென்னிலங்கையில் சீனச் சார்பு மகிந்தவின் வெற்றியை வைத்தும் துரோக கட்சிகளாக இனங்காணப்பட்ட டக்ளஸ் மற்றும் கருணா – பிள்ளையான் போன்றவர்களின் தோல்விகளும் தென் தமிழீழத்தில் ‘கூட்டமைப்பு’ பெற்றிருக்கும் சில கணிசமான வெற்றிகளும் ‘தமிழ்த் தேச அரசியல்’ என்ற தளத்தில் ஒரு புவிசார் அரசியலாக குவிகிறது.

இதன் வழி பேரம் பேசும் வல்லமைக்கான ஒரு வெளி எமக்கு திறந்திருக்கிறது.

மேற்குலக லொபியை பெரும்பாலான சிங்கள மக்கள் தமது ‘மகாவம்ச’ மனநிலையின் நிமித்தம் (மைத்ரி – ரணில் கூட்டணி தமிழர்களுக்கு ஏதோ வாரி வழங்குகிறார்கள் என்ற கற்பனை) உடைத்து
சீனச்சார்பு மகிந்தவை வெல்ல செய்ததன் மூலம் எமக்கான அந்தப் புதிய வெளியை திறந்துள்ளார்கள்.

கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு கஜேந்திரகுமாரின் கையில் சேர வேண்டியது காலத்தின் கட்டாயம்.

அதுவே தற்போதைக்கு இலங்கைத் தீவில் உள்ளக அளவிலும் – வெளியக அளவிலும் எமக்கான ஒரு திடமான அரசியல் இருப்பை தீர்மானிக்க உதவும்.

டயஸ்பொறா கூட முரண்பாடுகளை களைந்து ஒரு புள்ளியில் குவியும் நிலைக்கு வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.

சம்பந்தர் இனியாவது சிந்தித்து வழி விட்டு விலக வேண்டும்.

‘நந்திக்கடலை’ ஒரு கோட்பாடாக கற்றுக் கொண்டிருக்கும் ஒரு சிந்தனைக் குழாமின் தூர நோக்கிலான பணிவான வேண்டுகோள் இது.

000000000000000000000000000000000000000

தாயகத்தில் உண்மையில் நடப்பது தமிழ் அரசியல்வாதிகளின் சண்டை அல்ல. பாகப் பிரிவனையும் அல்ல.

அது பிராந்திய – மேற்குலக அரசுகளின் பகடையாட்டத்தின் பிம்ப தெறிப்புக்கள்.
விளைவே இந்த அக்கப்போர்.

இந்தியாவின் செல்லப் பிள்ளையாக இருந்த கூட்டமைப்பு, மைத்ரி ஆட்சிப் பொறுப்பேற்றதும் அதிலிருந்து விடுபட வேண்டிய ஒரு கட்டத்திற்குள் பிரவேசித்தது. காரணம் ரணிலும் சுமந்திரனும்.
ஏனென்றால் இருவரும் அமெரிக்காவின் செல்லப்பிள்ளைகள்.

மகிந்த சீனச்சார்பை நோக்கி வளைந்ததால் இந்தியாவும்,அமெரிக்காவும் ஆட்சி மாற்ற லொபிக்குள் இறங்கின. விளைவு ஆட்சி மாறியது.

ஆனால் அமெரிக்கா தந்திரமாக ரணிலை வைத்து சுமந்திரனூடாக கூட்மைப்பின் இந்திய சார்பை கேள்விக்குட்படுத்தியது. புலத்திலும் இம்மானுவேல் அடிகளார் உட்பட பல மேட்டுக்குடி கனவான் அரசியல் செய்பவர்களையும் தனது வளையத்திற்குள் கொண்டு வந்தது அமெரிக்கா.

தற்போது அந்தரத்தில் இந்தியா.

தூர நோக்கற்று தமிழின அழிப்புக்கு துணை நின்ற இந்தியாவை விட்டு பிராந்திய அரசியலில் கிட்டத்தட்ட அதனது ‘இடம்’ எப்போதோ பறிபோய் விட்டது.

தற்போது தனது இழந்த இடத்தை பிடிப்பதாக எண்ணி அலங்கோல ஆட்டத்தில் இந்தியா குதித்திருக்கிறது.

அது என்றைக்கும் பிடிக்க முடியாத இடம் என்கிறது ‘நந்திக்கடல்’.

கூட்டமைப்பில் சுமந்திரனின் கை ஓங்கினால் அது தமிழ் மக்களுக்கு மட்டும் ஆபத்தல்ல இந்தியாவிற்கும் ஆபத்துதான். காரணம் அவர் இனத்தை சிங்களத்திடம் அல்லது மேற்குலகத்திடம் அப்படியே முழுமையாக அடகு வைத்து விடுவார்.

இந்த பின்புலத்தில்தான் வரதராஜப்பெருமாளை களமிறக்கி நூல் விட்ட இந்தியா, தற்போது ஆனந்தசங்கரி, சுரேஸ் பிரேமச்சந்திரனூடாக ஒரு புதிய கூட்டமைப்பை உருவாக்கும் முனைப்பில் இருக்கிறது.

எனவே உண்மையில் நடப்பது தமிழ் மக்களுக்கான அரசியலே அல்ல. இது பிராந்திய – பூகோள பகடையாட்டம்.

இது தெரியாமல் பலர் இந்த வலைக்குள் விழுந்து சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் ஒரு ஆக்கபூர்வமான அரசியலும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அது கஜேந்திரகுமாரை நோக்கி மீள வந்திருக்கும் ஒரு வரலாற்று திருப்பம்.

இதை எப்படி எதிர் கொள்ளப்போகிறார் என்பதில் தங்கியிருப்பது அவரது கட்சி சார் அரசியல் அல்ல எஞ்சியுள்ள தமிழ்தேசிய அரசியலின் இருப்பு.

இது ஒரு மும்முனைப் போட்டி.
இந்திய சார்பு – அமெரிக்க சார்பு அரசியலை எதிர் கொள்ளும் ஒரு வரலாற்று பாத்திரமாக கஜேந்திரகுமாரை வரலாறு மீள இழுத்துக் கொண்டுவந்து விட்டிருக்கிறது.

பார்ப்போம். எப்படி கையாள்கிறார் என்று…?

Parani Krishnarajani